இது தொடர்பாக அந்தக் கூட்டமைப்பின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் விடுத்துள்ள அறிக்கையில் ;
இலங்கையில் இறுதிக் கட்ட போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதிவிசாரணை தேவை என்ற ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கையைக் கண்டித்தும், நிராகரித்தும் கொழும்பில் 7 ஆம் திகதி நடைபெற்ற இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் ஏகமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் வடக்கு,கிழக்கு மாகாணங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி யாழ்ப்பாணம்,வவுனியா,திருகோணமலை, மட்டக்களப்பு,அம்பாறை ஆகிய இடங்களிலிருந்து சென்று கலந்து கொண்ட தமிழ் கனவான்களும் சீமாட்டிகளும் வாய்மூடி மௌனிகளாக இருந்து இத் தீர்மானத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.
மனித உரிமைகளைப் பேணி பாதுகாப்பதிலும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிந்து செயல்படுவதிலும் சட்டத்துறையைச் சார்ந்தவர்களுக்கு பாரிய சமூகக் கடமை உள்ளது.ஆனால் இதனை மறந்து எமது தமிழ்ச் சட்டத்தரணிகள் சிலர் கொழும்பில் நடந்த இந்தக் கூட்டத்தில் செயற்பட்டிருக்கிறார்கள்.இந்த விடயம் வேதனைக்கும் வெட்கத்துக்கும் உரியது.
தமிழ் மக்கள் மீதான முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு சர்வதேசம் நீதி வழங்க வேண்டுமென்று உலகெங்கிலும் இருந்து குரல்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ள நேரத்தில் சட்டத்துறையைச் சார்ந்த எம்மவர்கள் சிலரின் இந்தத் துரோகச் செயலை எமது கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இவ்வாறான நடவடிக்கைகளை எதிர்க்கத் துணிவில்லாவிட்டாலும் அவற்றிலிருந்து ஒதுங்கி நிற்பதற்குத் தமிழ்ச் சட்டத்தரணிகளின் பேரால் செயற்படும் இந்தப் பிரதிநிதிகள் முன்வரவேண்டுமென்றும் கேட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக