உங்கள் கணினியின் வேகத்தை அதிகரிப்பது எப்படி?


உங்கள் கணினியின் வேகமானது தடைபட முதன்மையான காரணம் எந்தவொரு தகவலையும் உள்ளடங்கிய தகவல்சேமிப்பகத்திலிருந்து (Hard Disk) எடுத்துத் தருவதனால்தான். கிட்டத்தட்ட 70 விழுக்காடு கோப்பு எடுக்கும் நேரத்தை கோப்புக்களுக்குள் தேடுவதிலேயே செலவளிக்கிறது. நீங்கள் என்னதான் வேகமான (ஆதாவது 10,000 RPM அல்லது சாட்டா(SATA) இப்படி ஏதாவதொரு தொழில்நுட்பம் கொண்ட) தகவல் சேமிப்பகத்தைத் தேர்வு செய்திருந்தாலும் நீங்கள் எதிர்பார்க்குமளவு வேகத்தில் கணினியை இயங்கவைக்க இயலாது. சரி அதற்கு என்ன செய்யவேண்டும் என்று பார்ப்போம்.
கோப்புக்களை (Files) சரியான பெயரிடப்பட்ட கோப்பறைகளில் (Folders) போட்டுவையுங்கள்
முதலில் தேவைகளுக்கேற்ப உங்கள் கணினியின் உள்ளடங்கு தகவல்சேமிப்பகத்தில்(Hard Disk) கோப்பறைகள் உருவாக்கப்பட வேண்டும். பெரும்பாலும் இதற்கான கோப்பறைகள் உங்கள் கணினியின் இயங்குதளத்தின் (Operating System) சேமிப்பகப்பிரிவிலில்லாமல் வேறு சேமிப்பகப் பிரிவில் (Other Drive than C:) வைத்துக்கொள்ளுதல் வேண்டும். ஏனென்றால் இயங்குதளம் ஏதேனும் பிரச்சனைக்குள்ளாகி அழிக்கவேண்டிய நிலை வந்தாலும் அதை உங்கள் மற்ற முக்கியமான கோப்புகளைப் பாதிக்காமல் செய்யலாம்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களிலிருக்கும் ஒரே கோப்பு, கோப்பறைகளை அழித்தெறியுங்கள்
ஒரே கோப்பு, கோப்பறைகள் எப்படியும் உங்கள் சேமிப்பகத்தில் இறைந்து கிடக்க வாய்ப்புக்கள் அதிகம். அவைகளைத் தேடி வேரறுங்கள்.

கோப்புக்களை குறுவட்டுக்களிலோ (CD) எண்ணியல் திறன்வட்டுக்களிலோ (DVD) சேமித்துக்கொள்ளுங்கள்
கோப்புகள் பின்னாளில் உங்களுக்குத் தேவைப்படுமென்று ஐயமேற்பட்டால் அவைகளை வேறொரு குறுவட்டுக்களில் (CD) அல்லது எண்ணியல் திறன்வட்டுக்களில் (DVD) பாதுகாத்துக்கொண்டு அழிக்கலாம். முடிந்தவரை வட்டுக்களில் என்னென்ன கோப்புக்கள் உள்ளனவென்று நிரந்தரமை கொண்ட எழுதுகோல்களினால் (Permanent Ink Markers) எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
குப்பைக் கோப்புகளை அகற்றுங்கள்
குப்பைத்தொட்டியில் (Recycle bin), தற்காலிக கோப்புறைகளில் (temp folders) உள்ளவற்றை அடிக்கடி அழித்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் நீங்கள் இயக்கும் கோப்புச்சுருக்கி (Zip) போன்ற பயன்பாட்டு மென்பொருட்கள் அவை இயங்குவதற்குத் தேவையான தற்காலிகக் கோப்புகளை அங்கெல்லாம் வைத்து இயக்கிவிட்டு அழிக்காமல் போய்விடும் தன்மையுடையன. எனவே அவை அங்கெல்லாம் பெருகி மற்ற மென்பொருட்களுக்கான இடத்தை அடைத்துக்கொண்டு மற்றும் நேரம் அதிகமாகச் செலவிட்டுத் தேடவைத்துவிடுவதால் கணினி மெதுவாக இயங்கும்.

சேமிப்பகத்தில் சிதறுண்ட கோப்புக்களின் பாகங்களை அடிக்கடி ஒருங்கமையுங்கள் (Defragment)
உண்மையில் கோப்புக்கள் சேமிப்பகத்தில் உருவாக்கப்படும் வரிசைகளில் அழிக்கப்படுவதில்லை. எனவே ஒவ்வொரு கோப்பும் அழிக்கப்படும்போது அந்த இடம் சேமிப்பகத்தில் வெற்றிடமாக இருக்கும். அப்போது அதைவிட அதிக இடம் தேவைப்படும் கோப்பை சேமிக்க முயலும்போது அந்தக்கோப்பின் ஒருசில பகுதி மட்டுமே அங்கு சேமிக்கப்படும் அதே கோப்பின் மீதிப்பகுதி வேறெங்காவது கிடைக்கும் வெற்றிடத்தில் எழுதப்படும். பின்னர் அந்தக் கோப்பு தேவைப்படும்போது அதன் பாகங்கள் எங்கெல்லாம் சிதறிக்கிடக்கின்றனவோ அங்கெல்லாம் உங்கள் இயங்குதளம் சென்றும் தேடித்தேடி எடுக்கவேண்டியிருக்கும். இதனால் கோப்புக்களைத் திறக்க அதிக நேரமெடுத்து உங்கள் கணினி மெதுவாக இயங்கும். கோப்பு ஒருங்கமைப்புக்காக Disk Defragment என்ற உதவி மென்பொருள் உங்கள் Windows இயங்குதளத்தினுடனே கொடுக்கப்பட்டிருக்கும். இதை Start > Programs > Accessories > System Tools > Disk Defragmenter என்ற வழித்தடத்தில் இயக்கலாம். குறைந்தது மூன்றுமாதங்களுக்கொருமுறையாவது இயக்கவேண்டும். இது கோப்புக்களின் பாகங்கள் ஆங்காங்கு சிதறிக்கிடப்பதை ஒன்றுசேர்த்துவிடுவதால் தேவைப்படும்போது அந்தக் கோப்புக்கள் விரைவில் படித்து எடுக்கப்படும். இதனால் கணினியின் வேகம் கூடும்.

கண்டிப்பாக தடையற்ற மின்வழங்கியில்தான் கணினி இயக்கப்படவேண்டும்.
தடையற்ற மின்வழங்கி இருந்தால் உங்கள் கணினி முறையற்றதாக நிறுத்தப்பட (Improper Shutdown) வாய்ப்புகள் குறைவு. முறையாக கணினியை மூடி நிறுத்துவதால், இயங்கும்போது திறக்கப்பட்டிருக்கும் கோப்புக்கள் முறையாக மூடப்படும் மற்றும் தற்காலிக கோப்புக்கள் முறையாக அழிக்கப்படும். எனவே எப்போது முறையாக கணினியை மூடிநிறுத்தவும்.
முகப்பிடத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள்.
முகப்பிடத்தில் (Desktop) அதிகமாக கோப்புறைகளையும் கோப்புக்களையும் சேர்த்துவைக்காதீர்கள். ஏனென்றால் ஒவ்வொரு முறை சட்டங்கள் (Windows) மூடப்படும்போது திறக்கப்படும்போதும் முகப்பிடமானது (Desktop) மீட்கப்படும் (Refresh). அதிக கோப்புக்களிருந்தால் மீட்கப்படும்போதெல்லாம் உங்கள் கணினிக்கு சுமையாக இருக்கும்.

பார்வைக்கு மெருகூட்டும் அமைப்புக்களை நிறுத்தவும்.
பார்க்கும்போது அழகாயும், வித்தைகாட்டும் (Themes and Visual Enhancements) அமைப்புக்களை நிறுத்திவிடுங்கள். உங்கள் முகப்பிடத்தில் (Desktop) சுட்டியின் (Mouse) வலது விசையினை அழுத்தி (Right Click) Properties சட்டத்தைப் பெற்றுப் பின் அதில் Appearance திண்ணையில் மற்றும் அதிலுள்ள Effects எனும் விசையிலுமுள்ள அமைப்புக்களில் இந்த செயலிழப்புக்களைச் செய்யலாம். படத்தில் காண்க.


இலவசமாகக் கிடைக்கும் மென்பொருட்கள், என்னவென்றே தெரியாத மென்பொருட்களை மற்றும் விளையாட்டுக்களை நிறுவாதீர்கள்
பத்திரிக்கைகளுடன் இணைப்பாக வரும் மென்பொருட்கள், பகிர்வுமென் பொருட்கள் (Shareware) ஆகியவற்றை எதற்காக அவை பயன்படுகின்றன? என்று அறிவதற்கோ பயன்படுத்திப்பார்க்கவோ கணினியில் நிறுவாதீர்கள். அப்படியே நிறுவிப்பார்க்கவேண்டிய நிலை வந்தாலும், பிறகு அது வேண்டாத ஒன்றென்றோ, காலாவதியானதென்றோ தெரிந்தால் உடனே ControlPanel > Add/Remove Programs என்ற வழித்தடத்தில் சென்று நிறுவலை எடுத்துவிடுங்கள் (Uninstall) (முறையற்றதாக அதனை கோப்புறையில் சென்று அழிக்காதீர்கள்).

மேலும் மேற்கண்ட தூய்மைப்படுத்தும் வேலைகளைச் செய்ய ஒரு கட்டற்ற இலவச மென்பொருள் இணையத்திலுள்ளது. அதன்பெயர் CCleaner ஆகும். அதனை http://www.filehippo.com/download_ccleaner/ என்ற இணைய முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம்.

இவ்வாறெல்லாம் செய்யப்போய் பழைய கணினியே வேகமெடுக்கிறதே... எதற்கு புதிது? என்று நீங்கள் எண்ணினால் அதற்கு நான் பொறுப்பல்ல!...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக